கும்பகோணம்
இந்தியாவிலேயே நெல் குவிண்டால் ஒன்றுக்கு
ரூ.2,500 கொள்முதல் விலையாக வழங்கிய சத்தீஸ்கர் மாநில முதல்வரை, காவிரி டெல்டா விவசாயிகள் நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்தனர்.
தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் நெல் கொள்முதலுக்கான விலையை குவிண்டாலுக்கு 1,820 ரூபாய் மட்டுமே விவசாயிகளுக்கு வழங்கியுள்ள நிலையில், கடந்த காரீப் பருவத்தில் இந்தியாவில் எந்த ஒரு மாநிலமும் இதற்கு முன் மத்திய அரசின் நெல்லுக்கான குறைந்தபட்ச விலையான ரூ.1,750 வுடன், அம்மாநில விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, விவசாயிகளின் தற்கொலையை தடுக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில் விவசாயிகளை ஊக்குவிப்பதற்காக கூடுதலாக குவிண்டால் ஒன்றுக்கு ரூ.750 ஊக்கத் தொகையினை விவசாயிகளுக்கு வழங்கி, நெல் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையையும், தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதியையும் நிறைவேற்றிய சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகலை தமிழக காவிரி டெல்டா விவசாயிகள் நேற்று முன்தினம் இரவு முதல்வரின் அலுவலகத்தில் சந்தித்தனர்.
இதில், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் விவசாயிகளின் கூட்டமைப்பின் தலைவர் வலிவலம் சேரன், தஞ்சாவூர் மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலாளர் சுவாமிமலை சுந்தரவிமலநாதன், கும்பகோணம் வட்டத் தலைவர் ஆதி.கலியபெருமாள், இயற்கை வேளாண் விவசாயி ஏரகரம் சாமிநாதன், சடகோபன், மணப்படைவீடு விசுவநாதன், நாகை பாலாஜி ஆகிய விவசாய பிரதிநிதிகள் முதல்வரை சந்தித்து, அவருக்கு நினைவு பரிசாக மூன்று தென்னங்கன்றுகளை வழங்கி பாராட்டினர்.
சத்தீஸ்கர் முதல்வர், தமிழக விவசாய பிரதிநிதிகளுக்கு இனிப்புகள் வழங்கி, 22 நிமிடம் நடந்த கலந்துரையாடலில், சத்தீஸ்கர் மாநிலத்தில் 1,540 வகையான பாரம்பரிய நெல் சாகுபடி ரகம் சாகுபடி செய்யப்பட்டு வருவதாகவும் தமிழகத்திலும் பாரம்பரிய நெல் ரகத்தை தொடர்ந்து சாகுபடி செய்யுமாறு முதல்வர் விவசாயிகளிடம் வேண்டுகோள் விடுத்தார்.
தமிழக விவசாய பிரதிநிதிகள் முதல்வரிடம் இந்தியாவிலுள்ள பல்வேறு மாநில பாரம்பரிய நெல் சாகுபடியார்களை ஒன்றிணைத்து அனுபவப்பகிர்வு ஏற்படுத்தும் விதமாக அகில இந்திய அளவிலான பாரம்பரிய நெல் கருத்தரங்கு ஒன்றில் சத்தீஸ்கர் மாநிலத்தில் ஏற்பாடு செய்து நடத்திட வேண்டும் என விடுத்த கோரிக்கையை பரிவுடன் கேட்ட முதல்வர், தான் அடிப்படையில் ஒரு விவசாயி என்பதால்தான் நெல்லிற்கு இந்த ஊக்கத் தொகையை வழங்கி வழங்கியுள்ளேன்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் 20,000 கோடி ரூபாய் அளவுக்கு தற்போது நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. விரைவில் அகில இந்திய அளவிலான பாரம்பரிய நெல் கருத்தரங்கு ஏற்பாடு செய்வதாகவும் தமிழக விவசாயிகளிடம் உறுதியளித்துள்ளதாக காவிரி டெல்டா விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
அப்போது சத்தீ்ஸ்கர் மாநில முதல்வருடன், அம்மாநிலத்தின் கனிம வளத்துறை அரசு செயலாளர் அன்பழகன் உடனிருந்துள்ளார்.